Friday 9 December 2016

பயணம் - இராமேஸ்வரம் & தனுஷ்கோடி 3

இராமேஸ்வரம் வரை வந்த யாரும் கண்டிப்பாக சென்று வர வேண்டிய இடம் தனுஷ்கோடி.. அதற்கு முக்கியமான தேவை 4 wheel drive வசதி கொண்ட வாகனம்... ஏனென்றால் தனுஷ்கோடி முழுவதும் கடல் மணல்  தான்...ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கப்புறம் சாலை வசதி கிடையாது... நாம் பெரும்பாலும் உபயோகிப்பது 2 wheel drive வாகனங்களே... அதனாலென்ன வாடகைக்கு எடுத்து கொள்ளும் வசதி உள்ளது... அதிலும் 2 வகை உள்ளது... ஒன்று ஜீப்.. நமக்குன்னு பிரைவேட்டா ஒரு ஜீப்பை வாடகைக்கு(டிரைவரோட தான்) எடுத்துக்கலாம்... நம்ம சொல்ற இடத்துல இருந்து பிக்கப் பண்ணிட்டு தனுஷ்கோடியை சுத்தி காமிச்சுட்டு கொண்டு வந்து விட்ருவாங்க... இன்னொன்னு மஹிந்திரா வேன்...நம்ம ஊர் ஷேர் ஆட்டோ மாதிரி தான்... ஏறுங்க ஏறுங்கனு ஏத்தி அடைச்சுட்டு போவாங்க.. ஆனா டிக்கெட் விலை கொஞ்சம் சௌரியமா இருக்கலாம்... நாங்களே 6 பேர் இருந்ததால ஒரு ஜீப் வாடகைக்கு எடுத்துக்கிட்டு கிளம்பினோம்... ஒருவிதத்துல ஜீப் தான் வசதியும் கூட...

நாங்க முதல்ல போன இடம் கோதண்டராமஸ்வாமி கோவில்... தனுஷ்கோடி போற வழில ஒரு லெப்ட்டு எடுத்து போனா தீவுக்குள்ள ஒரு தீவு மாதிரி இந்த கோவில் இருக்கு... கொஞ்சம் வடநாட்டு பாணில இருக்குனு கூட சொல்லலாம்... 1000 வருசத்துக்கு மேல பழமையானதுன்னு சொல்றாங்க... ரொம்ப பிரமாதமான இடமனெல்லாம் சொல்ல முடியாது... நேரம் இருந்தா ஒரு தடவை போயிடு வாங்க..



தனுஷ்கோடியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம்..கீழே உள்ள படத்தில் உள்ள மாதிரி தான்... சாலை, சாலையின் ரெண்டு புறத்திலும் முட்ச்செடிகள்... அதற்கு பின் இரண்டு புறமும் கடல் தான்... கூகிள் மேப்ல பாத்தீங்கன்னாலே தெரியும் உங்களுக்கு.. இதே மாதிரி நிலப்பரப்பு ஒரு வெளிநாட்டில் இருந்திருந்தால் அதை அப்படி அழகுபடுத்தி வைத்திருப்பார்கள்... இதேமாதிரி ஒரு இடத்தை ஆஸ்திரேலியாவில் பார்த்திருக்கிறேன்..அவ்வளவு அருமையாக பராமரிக்கிறார்கள்... வரலாறே இல்லாதவர்களெல்லாம் அவர்கள் வரலாற்றில் அவ்வளவு ஆர்வம் காமிக்கிறார்கள்... நாமோ புறக்கணிக்கிறோம்... சரி இந்த புலம்பலை விட்டுட்டு தொடர்வோமே...



இந்த இடத்துல தான் எங்க ஜீப் டிரைவர் வேண்டிய விட்டு இறங்கி வண்டிக்கடில ஏதோ வேலை பண்ணினார்... என்னனு கேட்டேன்... இதுவரைக்கும் 2 wheel drive mode ல இருந்ததை 4 wheel mode க்கு மாத்தினாராம்.. அதிலிருந்தே ஆர்வம் தாங்க முடியவில்லை... ரோட்டிலிருந்து உள்ளே திரும்பியதும் நாங்கள் பார்த்த காட்சி இது தான்... வெள்ளை வெளேரென்ற மணல் பரப்பும் அதற்கு மேலே நீலவானமும் தான்...


இது தான் நான் முன்னமே சொன்ன வேன்... இந்த மாதிரி வாகனங்கள் போன தடத்துலயே தான் மற்ற வாகனங்களும் போகின்றன...


அங்கங்கே இந்த மாதிரி நீர்த்திட்டுகளும் கொக்குகளும்...


இது தான் தனுஷ்கோடியில் செயல்பட்ட ரயில் நிலையத்தின் மிச்சம்...


இது அங்கே இருந்த சர்ச்சின் மிஞ்சிய சுவர்கள்.. இந்த சுவர்களும் சமீபத்தில் விழுந்து விட்டதாக கேள்வி பட்டேன்...


வழி நெடுக இந்த மாதிரி உடைந்த படகுகளை பார்க்கலாம்... ஒருவிதத்தில் இவையெல்லாம் நடந்து முடிந்த ஒரு சோகத்தின் சின்னங்களாக இருந்தாலும் புகைப்பட கலையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு நல்ல தீனி தான் .... இந்த படத்தில் தெரியும் டவர் நமது தொலைத்தொடர்பு துறையால் அமைக்கப்பட்டுள்ளது... இங்கிருந்து இலங்கை வெறும் 21கிமீ தானாதலால் இந்த டவர் மேலிருந்து பார்த்தல் கூட தெரியலாம்..


கீழே இருப்பது தான் நாங்கள் வந்த ஜீப்... தனுஷ்கோடியின் ஒரு கோடியில் வங்காள விரிகுடாவும் இந்துமாக்கடலும் சந்திக்கும் முனையில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம்...


ஒருபுறம் அலைகளே இல்லாத வங்க கடல்... மறுபுறம் ஆர்ப்பரிக்கும் இந்திய பெருங்கடல்... இவற்றின் சங்கமம்... பிரமிப்பான காட்சி என்று தான் செல்வேன்... stunning moment.... அலையே இல்லாமல் ஒரு கடல் இருக்க முடியுமா என்பதை நேரில் பார்த்தால் மட்டுமே நம்ப முடியும்... சுண்டல் விக்கிறவுங்க முறுக்கு விக்குறவுங்க தொந்தரவு இல்லாம பெருசா கூட்டமும் இல்லாம எல்லையில்லாமல் விரிந்து கிடைக்கும் கடலை ரசிப்பதே தனி சுகம் தான்...


அதே மாதிரி கடலுக்குள் அங்கங்கே சில மணல் திட்டுக்களையும் காணலாம்.. அதில் நாலாவது திட்டு வரை இந்திய எல்லைனு நினைக்குறேன்... மற்றபடி காற்று கொஞ்சம் பலமாக வீசினால் மணலை தரையோடு அடித்துக்கொண்டு வருவதையும் பார்க்கலாம்... கீழே உள்ள வீடியோவில் இதையும் கடல் மணல், நீரின் நிறமாற்றங்களையும் பார்க்கலாம்...





இன்னொரு முக்கியமான விஷயம் சில மாதங்களில் இந்த கடல் உள்வாங்கவும் செய்கிறதாம்.. அதாவது அப்படி உள்வாங்கும் போது இப்போது தெரியும் மணல் பரப்பில் பாதி கூட பார்க்க முடியாதாம்... டிரைவர் சொன்னது சரியாக நியாபகம் இல்லை... கிட்டத்தட்ட 6 மாதங்கள் கடலின் அளவு ஒரு மாதிரியும் மீதி உள்ள 6 மாதங்களில் வேறு அளவிலும் இருக்குமாம்... நான் சென்றது October மாதம்...அப்போது கடல் உள்வாங்காத சமயம்.. இதெல்லாம் தெரியாமல் தான் அங்கு சென்றேன்.. ஒருவிதத்தில் அதிர்ஷ்டம்னு தான் சொல்லணும்... இதை மாதிரி எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன...

நம்மில் பெரும்பாலோரை பொருத்தவரை தனுஷ்கோடி என்பது 1964 புயலில் அழிந்து நமது அரசால் வாழத்தகுதியில்லாததாக அறிவிக்கப்பட்ட ஒரு இடம் அவ்வளவு தான். ஆனால் நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது சென்று வரவேண்டிய இடம்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான  அனுபவத்தை தரலாம்.. 
அது தான் தனுஷ்கோடி!!!

No comments:

Post a Comment